Wednesday 12 June 2013

ஆனந்தம் + ஆரோக்கியம் தரும் குற்றாலம் அருவி குளியல்

குற்றாலம் என்றால் அருவி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதற்கும் மேலே நிறைய விஷயங்கள் அங்கு இருக்கின்றன என்பதை எல்லோரும் அறிவதற்காகவே இந்த கட்டுரை.

குன்று + ஆலம் என்பதே குற்றாலம் ஆகும். குன்று என்றால் மலை. ஆலம் என்றால் குளிர்ந்த நீர். அதாவது குன்றில் இருந்து குளிர்ந்த நீர் கொட்டுவதால் இந்த அருவி குற்றாலம் என்று பெயர் பெற்றுள்ளது. இதனாலேயே திருஞானசம்பந்தர் தனது பாடலில் குற்றாலம் அருவியை குன்றத்து அருவி என்று பாடினார். பொதிகை மலை அடிவாரத்தில் மெல்லிய தென்றலுடன், பூஞ்சாரல் தூறும் குற்றாலத்தில் குளிப்பது ஆனந்தத்தை மட்டுமல்ல, உடலுக்கு ஆரோக்கியத்தையும் அள்ளித்தருகிறது. இதனாலேயே குற்றாலத்தில் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். குற்றாலத்தில் ஒன்பது அருவிகள் உள்ளன. அவற்றில் நீராடுவது சொர்க்கத்தில் மிதப்பது போன்ற உணர்வை தரும் என்றால் அது மிகையாகாது.

இத்தகைய சிறப்பு மிக்க குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜீன் மாதம் சீசன் துவங்கி ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும். சில ஆண்டுகளில் சீசன் துவங்க காலதாமதமாகி விடும். ஆனால் இந்தாண்டு சரியான நேரத்தில் அதாவது ஜீன் 1ந்தேதியே சீசன் அதிரடியாக துவங்கியது. தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இடையில் ஒரு நாள் பலத்த வெள்ளம் காரணமாக மெயினருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. சீசன் படுஜோராக உள்ள நிலையில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுத்து வருகின்றனர். போதாக்குறைக்கு பள்ளிகள் திறப்பு 15ந்தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்து, அனைத்து அருவிகளிலும் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இனி ஒவ்வொரு அருவிகளை பற்றி காண்போம்.
தேனருவி

திரிகூட மலையில் இருந்து உருவாகும் சித்ரா நதி மலையின் மேல் முதன்முதலில் 100 அடி உயரத்தில் இருந்து பூப்போல் தண்ணீர் விழுகிறது. இந்த அருவியின் பாறைகளில் அதிகளவு காட்டு தேனீக்கள் உண்டு. மிகவும் ஆபத்தான அருவியான இங்கு குளிக்க செல்பவர்கள் மெயினருவில் இருந்து சுமார் 5 கி.மீ. அடர்ந்து முரட்டு பாதை வழியாக செல்ல வேண்டும். இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் இங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

  • செண்பகாதேவி அருவி

மெயினருவியில் இருந்து இரண்டை கி.மீ. தொலையில் காட்டுப்பகுதியில் இந்த அருவி உள்ளது. தேனருவியில் இருந்து சுமார் இரண்டை கி.மீ. தூரம் ஓடி வந்து 30 அடி உயரத்தில் இருந்து அருவியாக கொட்டுகிறது. இங்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் அங்கு அமைந்துள்ள செண்பகாதேவி அம்மனை வழிபட்டு செல்லலாம். இந்த கோயிலில் குறிப்பிட்ட சில தினத்தன்று மஞ்சள் மழை பெய்யும். கடந்த 93ம் ஆண்டு அருவிப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அருவியின் முன்பகுதியில் இருந்த பகுதி பாறைகளால் மூடப்பட்டது. இங்குள்ள தடாகத்தில் ஆபத்து அதிகம் என்பதால் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக குளிப்பது அவசியம்.

  • மெயின்அருவி

இந்த அருவி செண்பகாதேவி அருவியில் இருந்து கீழே இரண்டரை கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழும் தண்ணீர் பொங்;கி பரந்து விரிந்து கீழே விழுகிறது. குற்றாலம் பேருந்து நிலையத்தின் மிக அருகிலேயே அமைந்துள்ள அருவி என்பதால் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இங்குள்ள குற்றாலநாதர் சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது என்பதால் அருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் சுவாமியை தரிசிப்பதை தவிர்ப்பது இல்லை.

  • ஐந்தருவி

குற்றாலம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஐந்தருவி. சுமார் 40 அடி உயரத்தில் இருந்து 5 கிளைகளாக பரந்து விரிந்து தண்ணீர் கொட்டும். 2 கிளைகளில் பெண்களும், 3 பிரிவுகளில் ஆண்களும் குளிக்கலாம். ஓரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குளித்து மகிழலாம் என்பதால் இந்த அருவிகளில் குளிக்க அனைத்து தரப்பினரும் விரும்புவர். இந்த அருவிக்கரையில் சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளதால் பக்தர்களுக்கும் விருப்பமாக அருவியாக இது விளங்குகிறது.

  • பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. அருவி)

ஐந்தருவிக்கு மேலே சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி. இங்கு முக்கிய பிரமுகர்கள் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படுவர். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் இந்த அருவிகளை சுற்றுலா பயணிகள் அவ்வளவாக விரும்புவது இல்லை.

  • புலிஅருவி

குற்றாலம் பேருந்து நிலையத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் வழியில் சமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புலியருவி. இந்த அருவிக்கு பாசுபதசாஸ்தா அருவி என்ற பெயரும் உண்டு. 3 பிரிவுகளாக குறைந்த அளவு உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவதால் குழந்தைகள் இங்கு குளிக்க மிகுந்த ஆசைப்படுவர். இதனால் குழந்தைகளுடன் சுற்றுலா வருபவர்கள் அதிகளவு இந்த அருவியையே முற்றுகையிடுவர்.

  • பழையகுற்றாலம் அருவி

குற்றாலத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த அருவி அழகனாறு என்ற நதியில் இருந்து உற்பத்தியாகிறது. சுமார் 100 அடி உயரத்தில் படந்;து தண்ணீர் கொட்டுகிறது. இங்கு குளிப்பதை சுற்றுலா பயணிகள் அதிகளவு விரும்புவதற்கு காரணம் அமைதியான சூழலில் அமைந்துள்ள அருவியாகும்.

  • பாலருவி

தேனருவிக்கு மேலே சிறிது தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி. இங்கு அருவி பால் போல பொங்கி வருவதால் பால் அருவி என்று பெயர் வந்தது. இந்த அருவிக்கு செல்லும் பாதை மிகவும் அபாயகரமானதாகும். இதனால் சுற்றுலா பயணிகள் இங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்து.

உற்சாகமூட்டும் படகுசவாரி

குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முக்கியமான பொழுது போக்கு அம்சமாக விளங்குவது படகுசவாரி ஆகும். ஐந்தருவிக்கு செல்லும் வழியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வெண்ணமடை குளத்தில் அமைந்துள்ள படகுகுழாமில் படகுசவாரி செய்து பொழுதைகழிப்பார்கள். ஆண்டு தோறும் சீசன் தொடங்கி சில நாட்களுக்கு பிறகு தான் படகுகுழாமில் தண்ணீர் நிரம்பும். அதன்பிறகே அங்கு படகுசவாரி துவங்கும். ஆனால் இந்தாண்டோ சீசன் தொடங்கி 4 நாட்களுக்குள் படகுகுழாமில் தண்ணீர் நிரம்பி வழிவதால் படகுசவாரியும் விரைவாகவே துவங்கி விட்டது. இங்கு மொத்தம் 33 படகுகள் உள்ளன. 2 இருக்கை படகுகள் 12ம்,4 இருக்கை படகுகள் 12ம், இழுவை படகுகள் 5ம், தனிநபர் படகுகள் 4ம் உள்ளன. இதில் அரை மணி நேரத்திற்கு 4 இருக்கை படகுகளுக்கு ரூ.100ம், 2 இருக்கை படகுகளுக்கு 75ம், இழுவை படகுகளுக்கு 120ம், தனிநபர் படகிற்கு ரூ.50ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. படகுசவாரிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக பாதுகாப்பு கவசம் அணிந்து செல்ல வேண்டும். இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

பூங்காக்கள்-நீச்சல் குளங்கள்

குற்றாலம் பேருந்து நி;லையத்தின் மேல்பகுதியில் அழகான பூங்கா அமைந்துள்ளது. அருவிகளில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவிற்கு தவறாமல் வந்து செல்பவர். தாங்கள் கொண்டு வந்த உணவை அருந்தி, சிறிது நேரம் ஓய்வு எடுத்து செல்வர். அத்துடன் குழந்தைகள் விளையாட ப+ங்காவில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் உள்ளதால் பொழுது போக்கு அம்சமாக இந்த பூங்கா விளங்குகிறது. அறை எடுத்து தங்க முடியாதவர்கள் இந்த பூங்காவிலேயே ஓய்வு எடுத்து செல்கின்றனர். இந்த பூங்காவிற்கு மேல் பகுதியில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நீந்தி விளையாட நீச்சல் குளம் அமைந்துள்ளது. இங்கு செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆயில் மஜாஜ்

குற்றாலத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்வதற்கு முன்பு ஆயில் மஜாஜ் செய்வது வழக்கம். குற்றாலம் என்றால் அருவிகள் எவ்வளவு பிரசித்தி பெற்றதோ அதே போல் ஆயில் மஜாஜ்சும் பிரபலமாகும். குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைகுற்றாலம் அருவி கரைகளில் ஏராளமான மசாஜ் ந்pலையங்கள் உள்ளன. மசாஜ் வகைகளுக்கு தக்கவாறு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பஸ்கள்

குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக தென்காசியில் இருந்து குற்றாலம், ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தென்காசி கிளையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் தென்காசியில் இருந்து குற்றாலத்திற்கு 5 ரூபாயும், குற்றாலத்தில் இருந்து பழையகுற்றாலத்திற்கு 7 ரூபாயும், ஐந்தருவிக்கு 5ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. சீசன் களைகட்டியுள்ள நிலையில் தற்போது 7 பஸ்கள் வரை இயக்கப்படுகிறது. இது தவிர நெல்லை, மதுரையில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சித்திரசபை

தமிழகத்தில் சிவபெருமான் நடனமாடிய 5 சபைகள் உள்ளன. அவற்றில் ஒன்று குற்றாலநாதர் கோயில் உள்ள சித்திரசபை ஆகும். இந்த சபையில் மூலிகைகளின் சாறு கொண்டு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அரங்கமும் இப்போதும் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிசேகம் நடத்தப்பட்டுள்ளது.

விடுதிகள்

குற்றாலம் சீசனுக்கு வரும் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வசதிகளுக்காக பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் சார்பிலும் நூற்றுக்கணக்கான விடுதிகள், லாட்ஜ்கள் உள்ளன. இவைகளின் தரத்திற்கு ஏற்ப வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட விடுதிகளை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக ரூ.880 வரையிலும், குறைந்த பட்சமாக 150 வரையும் ஒரு நாளுக்கு வாடகை வசூல் செய்யப்படுகிறது.



- குற்றாலம் குறித்த முழு தகவல்களையும் எழுதியவர் எனது சகோதரர் கணேஷ்குமார்.

No comments:

Post a Comment