Tuesday 11 June 2013

விபத்து அனுபவம்! மகிழ்ச்சியை மனதில் கொண்டு துக்கத்தை கடக்க வேண்டியிருக்கிறது!!

எங்கேயும் எப்போதும் படத்தைப்போல் ஒரு விபத்தை ஐந்தாண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன்…. விபத்து என்பது கேள்விப்படுபவர்களுக்கு ஒரு செய்தி.. ஆனால் சந்திப்பவர்களுக்கு?

நாகர்கோயிலில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ரதிமீனா பேருந்து இரவு 11.30 மணிக்கு திருமங்கலம் அருகே விபத்துக்கு உள்ளானது. இடி, மின்னலுடன் கடும் மழை பெய்து கொண்டிருந்த நேரம் அது.. அந்த மழையிலும் அதிவேகத்தில் பேருந்து வந்தது தான் விபத்திற்கு காரணம்.. ஒரு திருப்பத்தில் தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து பலமுறை உருண்டது…

விபத்து நடந்த சில நிமிடங்களுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை.. கவிழ்ந்து கிடந்த பஸ், பின்னால் வந்த லாரி டிரைவர்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்தவர்களை மீட்பது எல்லாம் புரிய சில நிமிடங்கள் ஆனது.. ஏதோ ஒரு இருக்கைக்கு கீழே அரை மயக்கத்தில் கிடந்த என்னை, யாரோ பிடித்து தூக்க, ஏதோ ஒரு கம்பியில் மாட்டியிருந்த என் இடது கையில் சதை கொஞ்சம் கம்பியிலேயே தொங்கியது…

சரிந்து கிடந்த பேருந்தில் மேல் பக்கத்தில் என்னை படுக்க வைத்தவர், உள்ளே இருந்தவர்களை மீட்க மறுபடியும் பேருந்துக்குள் சென்றார். கீழே இருந்தவர்கள் குதிம்மா, குதிம்மா என்று கத்த, அப்படியே தொம்மென்று குதித்து விழுந்தேன். காலில் செருப்பு எதுவும் இருக்கவில்லை.. கீழே கிடந்த கண்ணாடிச் சிதறல்கள் அப்படியே காலிலும் உடம்பிலும் குத்தியது.

என்னைத் தூக்கி விட்டவர்களை தவிர்த்து விட்டு, ஓரமாக தரையில் அமர்ந்து எங்கெல்லாம் அடிபட்டிருக்கிறது என பார்த்தேன்.. இடது கையையும், வலது காலையும் அசைக்கவே முடியவில்லை. தலை வலித்த வலியில் உயிர் போய்விடும் போய் இருந்தது. போட்டிருந்த ஆடை முழுவதும் இரத்தம்… எங்கெங்கு இருந்தோ இரத்தம் வழிந்து கொண்டிருந்தது… கொஞ்ச நேரத்தில் செத்துப் போகப் போகிறேன் எனத் தோன்றியது.

யாரிடமாவது ஃபோன் இருக்கிறதா எனக் கேட்க, ஒரு லாரி டிரைவர் போனை கொண்டு வந்து கொடுத்தார்.. அந்த இடத்தில் சிக்னல் வேறு கிடைக்கவில்லை.. அங்கு யாரிடம் எல்லாம் ஃபோன் இருந்ததோ, எல்லாவற்றையும் அவர் வாங்கி என்னிடம் கொடுத்தார்… சிக்னல் கிடைத்த ஃபோனில் இருந்து ஆம்புலன்ஸுக்கும், போலீஸுக்கும் நான் தான் தகவல் கொடுத்தேன்..  நாகர்கோயிலில் அப்பாவின் நண்பருக்கும் தகவல் சொல்லி விட்டு, வீட்டில் சொல்ல வேண்டாம், நீங்கள் மட்டும் கிளம்பி வர முடியுமா எனவும் கேட்டேன்.. அவர் உடனே கிளம்புவதாக சொன்னார்.. ஆனால் வீட்டில் சொல்லி விட்டார்.

மிக சோதனையான காலகட்டங்களில், நம்பிக்கையும், தைரியமும் சடாரென வந்து விடுவதை அந்த நேரத்தில் அனுபவப் பூர்வமாக உணர்ந்தேன். பின்னால் வந்த வாகனங்களில் இருந்தவர்கள் பேருந்தில் இருப்பவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். என் வலப் பக்கத்தில் ஒரு இளைஞன் தரையில் புரண்டு சத்தமாக அழுவதை கவனித்தேன்.. அங்கிருந்த அழுகைச் சத்தத்தை மீறி அவன் சத்தம் கேட்டது.. மெதுவாக நகர்ந்து (கிட்டத்தட்ட தவழ்ந்து) அவன் அருகில் சென்றேன்.. அவனது இடது கை, கொஞ்சம் தள்ளி தனியாக கிடந்தது.. தோளில் இருந்து இரத்தம் ஓடிக் கொண்டே இருந்தது.

’’எங்கப்பா போன மாசம் தான் செத்துப் போனார்.. என்னை நம்பி அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாம் இருக்காங்க.. நான் உயிரோட இருக்கணும்’’ என்று சத்தமாக கதறினான். அவன் துயரம் சகிக்க முடியாததாக இருந்தது.. ‘’ஒண்ணும் ஆகாது உங்களுக்கு. தைரியமா இருங்க’’ என்று அவன் தலையை எடுத்து என் மடியில் வைத்துக் கொண்டேன்.. ‘’அய்யோ சிஸ்டர், நான் உயிரோட இல்லைன்னா, எங்க வீட்டில் எல்லாரும் செத்துப் போயிடுவாங்க சிஸ்டர்’’ அவன் என் மடியில் புரண்டு கதறிக் கொண்டிருந்தான். எனக்கு தலை கிறுகிறுத்து மயக்கம் வரும்போல் இருந்தது.

சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் வர, நாங்கள் அதில் ஏற்றப்பட்டோம். அந்த இளைஞனும், நானும் ஒரு ஆம்புலன்ஸில் இரு சீட்களிலும் படுக்க வைக்கப்பட, இடையில் கீழே இருவர் படுத்தபடியும், ஒருவர் உட்கார்ந்தபடியும் அந்த ஆம்புலன்ஸ் கிளம்பியது. என்னை யாரோ தூக்கியபோது, நான் அந்த இளைஞனின் துண்டிக்கப்பட்ட கையை எடுத்து என்னருகில் வைத்துக்கொண்டேன்.. இப்போது நினைத்தாலும் உடல்  முழுவதும் சிலிர்க்கிறது…

மதுரை மருத்துவமனைக்கு போவதற்குள் ஆம்புலன்ஸில் இருந்த ஒரு அம்மா இறந்து போனார். உடன் உட்கார்ந்து வந்தவர் அவரது மகன் என்பது அப்போதுதான் தெரிந்தது. எனக்கு நானும் செத்துப் போகப் போகிறேன் என மீண்டும் தோன்றியது. மதுரை செண்பகம் மருத்துவமனைக்கு நாங்கள் சென்றபோது ஒரு மணி இருக்கும் என நினைக்கிறேன்.. டாக்டர்களே அங்கு இல்லை.. அந்த கை துண்டிக்கப்பட்ட இளைஞன் ’’எனக்கு வலிக்கு எதாவது மருந்து கொடுங்க, இல்லை கொன்னுடுங்க’’ என கதறிக் கொண்டே இருந்தான்.

எனக்கு முதல் உதவி அளித்த நர்ஸிடம், நான் அவனுக்கு வலிக்கு மருந்து கொடுக்கும்படி கேட்க, அந்த நர்ஸ் வள்ளென்று விழுந்தார். அருகில் இருந்த வேறொரு நர்ஸிடம், ‘’நான் செத்துடுவேனா” என்று கேட்க, அவர் முகத்தில் ஒரு சலனமும் இல்லை.. சில நிமிடங்களில் நினைவு தவறிப் போனது.. விபத்து நடந்து சிகிச்சை ஆரம்பிக்கவே, குறைந்தது மூன்று மணிநேரம் ஆகியிருக்கும் என நினைக்கிறேன். தனியார் மருத்துவமனைகளிலேயே இந்த கதி என்றால் அரசு மருத்துவமனைகளில்?

எனக்கு நினைவு திரும்பும்போது மறுநாள் இரவாகி இருந்தது.. விழித்தபோது என் குடும்பமும், சில நண்பர்களும் என்னோடு இருந்தார்கள்.. இடது கையிலும், வலது காலிலும் பல இடங்களில் எலும்பு முறிவுகள் இருந்தன. தலையில் அடிபட்டு இரத்தம் உறைந்து போயிருந்தது. அதன்பின் அங்கிருந்து நாகர்கோயில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றேன்..ஓரளவு இயல்பு நிலைக்கு வரவே, ஒருமாதம் ஆனது.

விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் என் ஜன்னலோர இருக்கையை பக்கத்து இருக்கை பெண்ணிற்கு மாற்றிக் கொடுத்திருந்தேன்… திருநெல்வேலியில் ஏறிய அவள் அண்ணா பல்கலையில் படித்துக் கொண்டிருந்தாள். ஏறியதில் இருந்தே வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்த அவள், கயத்தாறு வரும்போது கொண்டு வந்திருந்த உணவை பகிர்ந்து சாப்பிடும் அளவுக்கு நெருக்கமாகிப் போனாள்… ஜன்னலோர இருக்கையை என்னிடம் விரும்பி வாங்கிக் கொண்டாள்.. பதிமூன்று பேர் இறந்து போன அந்த விபத்தில் அந்தப் பெண்ணும் இறந்து போனாள்….இதை எழுதும் இந்நிமிடம் அந்தப் பெண்ணின் பெயர் நினைவில் கூட இல்லை.. ஆனால் அந்த முகத்தையும், அவளது பேச்சையும் இன்றுவரை ஒருநாள் கூட நினைக்க மறந்தது இல்லை.

இடது கை துண்டிக்கப்பட்ட அந்த இளைஞன் எப்படி இருக்கிறான் என அறியும் ஆவல் இருந்தது.. அவன் இறந்திருப்பானோ என்கிற பதட்டமும் இருந்தது. மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில் என அலைந்து ஒருவழியாக கண்டுபிடித்தேன்.. அம்மாவையும் அழைத்துக் கொண்டு அவனைப் பார்க்கப் போன முதல்நாள் இன்னமும் அப்படியே நினைவில் இருக்கிறது. என்னைப் பார்த்ததும், அவனுக்கு சந்தோஷத்தில் அழுகை வந்தது. அவனது உறவினர்களிடம் ‘’என்னைக் காப்பாத்தினவங்க” என்று அறிமுகப்படுத்தினான்.. அவனது பெயர் நவீன் என்பதையும் தெரிந்து கொண்டேன். துண்டிக்கப்பட்ட கையை மறுபடியும் வைக்க முடியவில்லை.

ஓட்டுநரின் அஜாக்கிரதையால் நடந்த அந்த விபத்தில் ஓட்டுநருக்கு எதுவும் ஆகவில்லை. அந்த பஸ் நிறுவனத்திற்கும் ஒரு நஷ்டமும் இல்லை. நானும், நவீனும் ரதிமீனா டிராவல்ஸ் மீது வழக்குத் தொடர்ந்து, ஒரு கட்டத்தில் சலித்துப் போய் நிறுத்திக் கொண்டோம். பணம் கொடுத்து, எல்லாவற்றையும் அவர்கள் சரிக்கட்டிக் கொள்கிறார்கள்.

அந்த பேருந்தில் பயணம் செய்த எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒருவகையில் அந்த விபத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. எங்கள் வலது பக்கத்தில் துறுதுறுவென விளையாடிக் கொண்டு வந்த அந்தக் குட்டிக் குழந்தை என்னவானது என்றே தெரியவில்லை. எதாவது ஆகியிருக்குமோ என்கிற பயத்திலேயே அதுபற்றி விசாரிக்கவில்லை.

அதன்பின் இன்றுவரை பேருந்து பயணம் என்பது எனக்கு மரண அவஸ்தை தான்.. தவிர்க்க முடியாத நேரங்களில் தனியாக பயணம் செய்ய நேர்ந்தால் இரவு முழுக்க எந்த நிமிடமும் விபத்து நடக்கலாம் என்கிற பயத்தில் நடுங்கியபடி விழித்திருப்பேன்.. பலநாட்கள் அழுதபடியும் தனியாக பயணம் செய்திருக்கிறேன்.. அந்த விபத்தில் தலையில் அடிபட்டதால், என்னுடைய நுகரும் திறனை (Smelling sense) இழந்தேன்…..

எல்லா துக்கத்திலும் மகிழ்ச்சி ஒளிந்திருக்கும் என்பதும் என் வாழ்க்கையில் நூறு சதவீதம் உண்மையான வாக்கியம்.. அன்று அறிமுகமான நவீன் இன்றுவரை எனக்கு நல்ல நண்பன்.. அவன் அம்மா, அவன் தங்கை, கடந்த வருடம் அவன் திருமணம் செய்து கொண்ட அவன் மனைவி எல்லோரும் எனக்கு இப்போதுவரை மிக நெருக்கமான நண்பர்கள் தான். அந்த மகிழ்ச்சியை மட்டும் மனதில் கொண்டு தான், அந்த துக்கத்தை கடக்க வேண்டியிருக்கிறது.

இந்த விபத்து அனுபவம் என்னுடைய அனுபவம் இல்லை... என் தோழி ஒருவரின் அனுபவம். படிக்கும்போது என் கண்கள் குளமாகின. உருக்கமான இந்த பதிவை இங்கு வெளியிடுவதற்கு காரணம், கடைசியில் வரும் வரிகளுக்காகத்தான்.

ஆம்! மகிழ்ச்சியை மனதில் கொண்டு தான், அந்த துக்கத்தை கடக்க வேண்டியிருக்கிறதுஞ்!!

2 comments:

  1. கண்ணீர் வரவழைக்கும் பதிவு

    இந்த மாதிரி விபத்தில் பாதிபடைவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளே அவர்களுக்கு தெம்பூட்டும் ஆனால் கடமைக்காக பணி புரியும் இதுபோன்ற மருத்துவர்கள் ஊழியர்கள் இந்த துறையை விட்டு சென்று விடுவதே நல்லது.

    ஓட்டுனர்களும் அவர்களின் கடமையை உணர்ந்து செயல் பட வேண்டும்.

    அவர்ளின் வாழ்க்கை இனிமேலாவது சிறப்பாக அமைய இறைவனிடம் பிராத்திக்கின்றேன்

    ReplyDelete
  2. கமெண்ட்ஸ் பாக்ஸ் டைப் மாத்தினால் கமெண்ட் பண்ண ஈசி ஆகா இருக்கும் சகோ

    ReplyDelete